இன்றைய போக்சோ
கி.கிரி ஆசிரியருக்கு 'கம்பி'
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தின் ஒரு கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சி கடந்த, 1ல் செட்டிமாரம்பட்டியில் நடந்தது. இதில் பங்கேற்க, பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் சென்று, திருமணத்திற்கு முந்தைய நாளே மண்டபத்தில் தங்கியுள்ளனர். அப்போது, நள்ளிரவு, 1:00 மணிக்கு பள்ளி ஆங்கில ஆசிரியர் உசேன், 40, பத்தாம் வகுப்பு மாணவரை மண்டபத்தில் உள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து, தலைமை ஆசிரியரிடம், அந்த மாணவரின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். அவரோ, 'அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன்; நீங்கள் அமைதியாக இருங்கள். பெரிதுபடுத்தினால் பள்ளிக்கு கெட்டப்பெயர் வரும். ஆசிரியர் மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி, பெற்றோரை திருப்பி அனுப்பியுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாதிக்கப்பட்ட மாணவர், துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் நேற்று காலை பள்ளி முன் திரண்ட மாணவனின் பெற்றோர், உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி போலீசார், மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், டி.இ.ஓ., ராஜன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர், ஆசிரியரிடம் விசாரித்தனர். பின்னர், உசேனை, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.3 ஆசிரியர், ஹெச்.எம்., கைது
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், 3 பேர், ஜன., 22ல், பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதுதொடர்பாக, மூன்று மாணவர்கள், 'போக்சோ'வில் கைதான நிலையில், இது குறித்து அறிந்தும் போலீசுக்கு தகவலை தெரிவிக்காமல் மறைத்ததாக, பள்ளி ஆசிரியர்கள் முத்துராமன், ராஜேந்திரன், 59, பானுப்பிரியா, 37, ஆகியோர் மீது மகளிர் போலீசார், நேற்று வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து, 'போக்சோ' நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்திய கூறப்படும் தி.மு.க.,வைச் சேர்ந்த பி.டி.ஏ., தலைவர் ஜோதியிடம் விசாரணை நடக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., சார்பில், சேலம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கட்டட தொழிலாளிக்கு 'காப்பு'
மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர், மாதையன்குட்டை, ராஜாஜி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி பிரதீப், 33. இவர், 15 வயதுடைய, 10ம் வகுப்பு மாணவியை கடந்த, 26ல் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்து, மாணவியை மீட்டு, 'போக்சோ' சட்டத்தில் பிரதீப்பை நேற்று கைது செய்தனர். நெல்லை பேராசிரியர் சிக்கினார்
திருநெல்வேலி: திருநெல்வேலி துாய சவேரியார் இருபாலர் கல்லுாரியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு, அங்கு பணியாற்றும் பேராசிரியர் பிரைட் ஜோவர்ட்ஸ், 34, மொபைல் போனில் பேசி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் போக்சோ வழக்கில் இவரை நேற்று கைது செய்தனர்.இதே கல்லுாரியில் சில மாதங்களுக்கு முன், இரு பேராசிரியர்கள் மீது பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய சம்பவத்தில் பிரைட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.