நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,402 பேருக்கு சிகிச்சை
கிருஷ்ணகிரி :வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 57 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும், 8 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, பாகலுார், தளி, கெலமங்கலம், ஆலப்பட்டி மற்றும் சூளகிரி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடந்தது. அதன்படி வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமில், 1,402 பேர் சிகிச்சை பெற்றனர். எனவே பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ சிசிக்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.