7,525 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் சிக்கினர்
ஓசூர்:சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்ஹா பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தர்பூசணி ஏற்றிச்சென்ற லாரியில் சோதனை செய்தனர். பழ மூட்டைகளுக்கு அடியில் தலா, 35 லிட்டர் கொண்ட, 215 கேன்களில் எரிசாராயம் இருந்தது. லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சையது, 34, மற்றும் பாபுராஜ், 37, ஆகியோரிடம் விசாரித்தனர்.கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, பாலக்காடு பகுதிக்கு கள்ளச்சாராயம் காய்ச்ச கடத்திச் செல்வது தெரிந்தது. லாரியில் இருந்த, 7,525 லிட்டர் எரிசாராயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். சையது, பாபுராஜை கைது செய்து, ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.