மேம்பால பக்கவாட்டு சுவரில் பைக் மோதி 2 சிறார்கள் பலி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே மேம்பால பக்கவாட்டு சுவரில் பைக் மோதி இரு சிறுவர்கள் பலியாகினர். கிருஷ்ணகிரி அடுத்த பாறையூரை சேர்ந்தவர் மதன், 15; பத்தாம் வகுப்பு மாணவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய், 16; டிப்ளமா முதலாமாண்டு மாணவர். சாரதி, 14; ஒன்பதாம் வகுப்பு மாணவர். மூவரும் உறவினர்கள். மதனின் தந்தை கோவிந்தராஜ், சூளகிரி துணை பி.டி.ஓ.,வாக உள்ளார். கோவிந்தராஜ் அலுவலக வேலையாக நேற்று சென்னை சென்றுவிட்டார். அவரது மகன் மதன், சஞ்சய், சாரதியுடன், 'யுனிகார்ன்' பைக்கில் சென்றுள்ளார். பைக்கை மதன் ஓட்டியுள்ளார். மாலை, 6:10 மணியளவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி அருகே சென்னை - கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில், எதிர்புறத்தில் வந்துள்ளனர். அப்போது, மழை பெய்ததால், பைக்கை வேகமாக ஓட்டி சென்று ஆடவர் கலைக்கல்லுாரி மேம்பாலத்தின் கீழ் நிற்பதற்காக சென்றுள்ளனர். அதில், கட்டுப்பாட்டை இழந்த பைக், மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி, மூவரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் படுகாயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சஞ்சய் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். தனியார் மருத்துவமனையில் சாரதி சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.