மலை கிராமங்களுக்கு மின்தடை 25 புதிய கம்பங்கள் நட்டு சப்ளை
ஓசூர், அஞ்செட்டி அருகே, 3 நாட்களாக மலை கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில், 25 மின்கம்பங்கள், புதிதாக நடப்பட்டு மின்சப்ளை வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சு பஞ்.,க்களில் மொத்தம், 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மின்வாரியத்தின் மூலம், ஒகேனக்கல் வழியாக மின்சப்ளை வழங்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு, இக்கிராமங்களுக்கு மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த, 3 நாட்களுக்கு முன், டிரான்ஸ்பார்மர் மற்றும் பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் ஒன்றரை கி.மீ., துார கேபிள் பிரச்னையால், நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சு பஞ்.,க்களில் மின்தடை ஏற்பட்டது. முழு நேரமும் மின்சாரம் இல்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.இரவில் வெளிச்சமின்றி மக்கள் வீடுகளில் முடங்கினர். மொபைல்போன், டார்ச்லைட் போன்றவற்றுக்கு சார்ஜ் போட முடியவில்லை. இரவில், வனவிலங்குகளின் நடமாட்டத்தை மக்களால் கண்காணிக்க முடியாமல் போனது. 3 நாட்களாக இப்பகுதிகளில் மொத்தம், 25 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்த மக்கள், 3 நாட்களுக்கு பின் நிம்மதியடைந்தனர்.