டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு மாவட்டத்தில் 5,382 பேர் ஆப்சென்ட்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த, 'குரூப் - 4' தேர்வில், 5,382 பேர் தேர்வெழுதவில்லை.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8 வட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த, 93 மையங்களில் நடந்த இத்தேர்வில், விண்ணப்பித்த, 27,955 பேரில், 22,573 பேர் தேர்வு எழுதினர், 5,382 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கிருஷ்ணகிரி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி, குந்தாரப்பள்ளி தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல தேர்வு மையங்களில் காலை, 9:00 மணிக்கு மேல் தேர்வர்களை மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. நகரை ஒட்டிய பல பகுதிகளில் உள்ள தேர்வு மையத்திற்கு பஸ் வசதி இல்லை. அதனால், ஒரு சில நிமிடங்களே தாமதான நிலையில், தேர்வெழுத பலர் அனுமதிக்கப்படவில்லை. காலை, 9:30 மணிக்கு தேர்வு துவங்க இருந்தநிலையில், 9:03 மணிக்கு வந்தவர்களை கூட அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பஞ்., க்கு உட்பட்ட தனியார் பள்ளியில், சில நிமிடங்கள் தாமதாக வந்த, 50க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கேட் மூடப்பட்டது. கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், கேட்டுகளை திறக்க தேர்வுமைய பொறுப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.அதேபோல, கிருஷ்ணகிரி, காந்திரோடு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. மேலும் தேர்வு மையத்தில் நுழைவாயிலில் சாக்கடை கால்வாய் கட்ட குழி தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால், மாற்றுப்பாதையை தேடி கண்டுபிடிக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமம் ஏற்பட்டதால், சிலருக்கு தாமதம் ஆனது. அவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்காததால், ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கிருஷ்ணகிரி வட்டத்தில், 'குரூப் - 4' தேர்வு எழுத விண்ணப்பித்த, 7,641 பேரில், 1,791 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.