6 மாத குழந்தை கொலை; தந்தைக்கு இரட்டை ஆயுள்
ஓசூர் : சூளகிரி அருகே, தவறான உறவில் பிறந்த, 6 மாத ஆண் குழந்தையை கொன்றவருக்கு, ஓசூர் நீதிமன்றம், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியை சேர்ந்தவர் முனியப்பன், 45, விவசாயி. இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த, 2010 ல் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இவர்களுக்கு கடந்த, 2011ல் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கும், தன் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என நினைத்த முனியப்பன், அக்குழந்தையை கொல்ல முடிவு செய்து, கடந்த, 2011 செப்., 28 ல் அந்த, 6 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, வீட்டருகே பாறையில் வீசி சென்றார். சூளகிரி போலீசார் முனியப்பனை கைது செய்தனர். கடந்த, 14 ஆண்டுகளாக, ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட முனியப்பனுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சந்தோஷ் தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில், மேலும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.