அச்சுறுத்திய ஒற்றை யானை பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு
ஓசூர்,:தேன்கனிக்கோட்டை அருகே, வனத்துறையினர் மற்றும் மக்களை விரட்டிய ஒற்றை யானை, பட்டாசு வெடித்து விரட்டியடிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார், ஆலஹள்ளி, தாவரக்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், கிராமத்தில் புகுந்து ராகி, தக்காளி பயிர்களை நாசம் செய்தன.இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியபோது, இரு யானைகள் அங்கிருந்து வனப்பகுதி நோக்கி ஓடின. பட்டாசு சத்தத்திற்கு அசராத வயதான ஒரு யானை, திடீரென வனத்துறையினர், பொதுமக்களை விரட்டியது.இதனால் அச்சமடைந்த அவர்கள், யானையை விரட்ட தொடர்ந்து பட்டாசுகளை வீசினர். இதையடுத்து அங்கிருந்த வனப்பகுதிக்குள் யானை சென்றது. அதுபோல, ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று முன்தினம் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளன.அதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிபள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப்பள்ளி, கொம்மேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், பென்னிக்கல் பகுதியில் காலிபிளவர் தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தன. நேற்று மாலை, யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.