மினி பஸ்சை சிறை பிடித்த ஆட்டோ டிரைவர்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி அருகே, மினி பஸ்சை, ஆட்டோ டிரைவர்கள் சிறைபிடித்து, பயணிகளை கீழே இறக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகள் வழியாக, 15க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கிருஷ்ணகிரியிலிருந்து அரசு மருத்துவக் கல்லுாரிக்கு செல்ல நபர் ஒருவருக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களில் கிருஷ்ணகிரியில் இருந்து அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வாடகையாக நபர் ஒருவருக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மினி பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால், பயணிகள் பலரும் மினி பஸ்களில் அதிகமாக செல்கின்றனர். இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, நேற்று மாலை, 5:30 மணியளவில், 3 ஆட்டோ டிரைவர்கள், கிருஷ்ணகிரியில் இருந்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, 10 பயணிகளுடன் சென்ற மினி பஸ்சை, போலுப்பள்ளி அருகே தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள், ஆட்டோ டிரைவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.