உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளக்காதலியை கொன்று காதலனும் தற்கொலை

கள்ளக்காதலியை கொன்று காதலனும் தற்கொலை

ஓசூர்:ஓசூரில், கள்ளக்காதலியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை சேர்ந்தவர் செல்வராஜ், 48; ஓசூரில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், நக்கல்பட்டியை சேர்ந்த குணசேகரன் மனைவி காயத்ரி, 23, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. காயத்ரிக்கு குழந்தை உள்ளது. ஓசூர், வானவில் நகரில், செல்வராஜ் வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை செல்வராஜ் வீட்டில், காயத்ரி மர்மமாக இறந்து கிடந்தார். வீட்டின் ஒரு அறையில் செல்வராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த பிரேத பரிசோதனையில், காயத்ரி தலையின் பின்பகுதியில் காயம் இருந்ததும், மூக்கை அழுத்தியதில் ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து உயிரிழந்ததும் தெரிந்தது. சுவற்றில் மோதியதில் காயத்ரிக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். மூக்கை தலையணையால் அழுத்தி, செல்வராஜ் கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார், இதை கொலை வழக்காக மாற்றினர். விசாரணையில், செல்வராஜை சந்திக்க, நேற்று முன்தினம் காலை தன் கணவரிடம், கிருஷ்ணகிரி செல்வதாக கூறி விட்டு ஓசூருக்கு, குழந்தையுடன் காயத்ரி வந்துள்ளார். மதியம், 3:30 மணிக்கு, செல்வராஜ் வீட்டிற்கு வந்த நிலையில், மாலை, 4:00 மணிக்கு அருகிலுள்ள வீட்டு பெண்ணிடம், காயத்ரியின் குழந்தையை செல்வராஜ் கொடுத்துள்ளார். அதன் பின், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மாலை, 4:15 மணி வரை, காயத்ரியின் மொபைல் போனில், அவரை செல்வராஜ் பல்வேறு கோணங்களில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். அதன் பின் ஏற்பட்ட தகராறில், காயத்ரியை செல்வராஜ் கொலை செய்து, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !