நிலத்தகராறில் அண்ணன், அண்ணி வெட்டிக்கொலை வெறியாட்டம் ஆடிய தம்பி, மனைவியுடன் கைது
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நிலத்தகராறு காரணமாக குழந்தைகள் கண் முன், அண்ணன், அண்ணியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த, தம்பி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கே.பாப்பாரப்பட்டி பஞ்.,க்குட்பட்ட தலைவிரிச்சான் கொட்டாயை சேர்ந்தவர் மாரிமுத்து, 37. இவரது மனைவி ருக்மணி, 27. இவர்களுக்கு யுவஸ்ரீ, 8, நவநிகா, 3 என்ற இரு மகள்கள் உள்ளனர். மாரிமுத்து, திருப்பூரில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். மாரிமுத்துவின் தம்பி முருகன், 33; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி, 23, போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.மாரிமுத்துவுக்கும் அவரது தம்பி முருகனுக்கும் அவர்களது நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. ஊர் பெரியவர்கள் மூலம் பேசி பாகப்பிரிவினையும் செய்து கொண்டனர். அதில், ஒப்புக் கொண்டவாறு மாரிமுத்து, முருகனுக்கு நிலத்திற்கான பணத்தை கொடுத்தார். இருப்பினும் நிலப்பிரச்னை முழுவதுமாக தீரவில்லை. கடந்த, 3 மாதங்களுக்கு முன் மாரிமுத்து தன் வீட்டிற்கு செல்லும் பாதையில் இருந்த கொழிஞ்சி மரத்தை வெட்டியுள்ளார். இதற்கு முருகனின் மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து, சிவரஞ்சனியை தாக்கினார். சிவரஞ்சனி சாமல்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் மாரிமுத்து தன் பழைய வீட்டை இடித்து தமிழக அரசின் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்டி வந்துள்ளார். பழைய வீட்டை இடித்ததால், புதுாரில் வாடகை வீட்டில் குடியேறினார். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில் மனைவி ருக்மணி மற்றும் குழந்தைகளுடன் தலைவிரிச்சான் கொட்டா யில், தாங்கள் புதிதாக கட்டும் வீட்டு பணியை பார்க்க சென்றார். அப்போது சிவரஞ்சனி அவர்களை வழிமறித்து திட்டியுள்ளார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அரிவாளுடன் அங்கு வந்த முருகன், ருக்மணி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் நடுரோட்டில் குழந்தைகளின் கண் முன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், மாரிமுத்து, அவரது மனைவி ருக்மணி இருவரும் இறந்தனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், சாமல்பட்டி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். கொலையாளிகளை பிடிக்க, 4 தனிப்படை அமைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானியில் முருகன், அவரது மனைவி சிவரஞ்சனி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், அவர்களை இரவோடு இரவாக கைது செய்து, சாமல்பட்டி கொண்டு வந்தனர். நிலத்தகராறில் அண்ணன், அண்ணியை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.