நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
கிருஷ்ணகிரி, நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற, விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: விளையாட்டை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், ஆதரவற்ற நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆதரவற்ற சூழ்நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பம் பெற்று, மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.தமிழகத்தின் சார்பில், தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிகளை பெற்றிருத்தல் அல்லது பங்கேற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இத்திட்டத்தில், மாதாந்திர ஓய்வூதியமாக, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள், www.sdat.tn.gov.inஎன்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி, என்ற விலாசத்தில் வரும், 31 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.