கார் கண்ணாடியை உடைத்ததாக பா.ம.க., - மா.செ., மீது வழக்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பல்லப்பட்டியை சேர்ந்தவர் ரவி, 55. பா.ம.க., முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர். இவர், பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதனுடன் கடந்த, 8ல், திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் நடந்த, பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ரவியின் காரை, ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள ஓட்டல் முன் நிறுத்தி விட்டு மேகநாதன் காரில் சென்றார். செயற்குழு கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணியை முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன் விமர்சித்து பேசினார். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் காரில் கிருஷ்ணகிரி திரும்பியுள்ளனர். அப்போது ஓட்டல் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரவியின் இன்னோவா காரின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளை சிலர் உடைத்து சென்றது தெரிந்தது. இது குறித்து ரவி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். அதில், பா.ம.க., கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம், தன் ஆதரவாளர்களுடன் வந்து, கார் கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்துள்ளார். அதன்படி மோகன்ராம் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.