மாநகராட்சி பில் கலெக்டர் மீது பல்வேறு புகார் பொது பிரிவிற்கு இடமாற்றி கமிஷனர் நடவடிக்கை
ஓசூர், ஜன. 2-ஓசூர் மாநகராட்சியில் பல்வேறு புகார்களுக்கு ஆளான பில்கலெக்டரை, பொது பிரிவிற்கு இடமாற்றம் செய்து, கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மண்டலம், 1 பகுதியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தவர் சின்ன ஜெயக்குமார்; இவரது தந்தை மாதையன் துாய்மை பணியாளராக இருந்து, பணி காலத்தில் உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் இருவருக்கு பில் கலெக்டராக பணி வழங்கப்பட்டது. இவர் பணிக்கு சேர்ந்து நன்னடத்தை காலத்திலேயே, சொத்து வரி பணத்தை கையாடல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொதுவாக நன்னடத்தை காலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அதன் பின் மீண்டும் பணியில் சேருவது சிரமம். ஆனால், தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, ஓசூர் மாநகராட்சியில் மீண்டும் பில் கலெக்டராக சின்ன ஜெயக்குமார் பணியில் சேர்ந்தார். இவர் சொத்துக்களுக்கு புதிய வரி விதிக்கும் போது, தன் தம்பியான முரளி மற்றும் வெளியாட்கள் சிலரை அனுப்பி, பொதுமக்களிடம் அடாவடி வசூலில் ஈடுபடுவதாகவும், பணம் தராதவர்கள் கட்டங்கள் மீது வரி சுமையை அதிகப்படுத்துவதாகவும், தனியார் மருத்துவமனையில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கமிஷனர் ஸ்ரீகாந்த்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என பொய்யாக கூறி, சிலரிடம் பணம் வாங்கியதாகவும், பில் கலெக்டர் சின்ன ஜெயக்குமார் மீது பல்வேறு புகார்கள் சென்றன.மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரனும், சின்ன ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து, கமிஷனர் ஸ்ரீகாந்த் விசாரணை நடத்தினார். சின்ன ஜெயக்குமார் மீதான புகாரை உறுதி செய்யும் வகையில், கமிஷனர் ஸ்ரீகாந்திற்கு சிசிடிவி கேமரா காட்சி ஆதாரமும் கிடைத்ததாக தெரிகிறது. இதனால், பில் கலெக்டர் ஜெயக் குமாரை, அப்பணியில் இருந்து விடுவித்து, மாநகராட்சி பொது பிரிவிற்கு மாற்றி, கமிஷனர் ஸ்ரீகாந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.