கட்ட பஞ்சாயத்தில் மாஜி கிராம உதவியாளர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கியதாக புகார்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாமோதர ஹள்ளியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சின்னசாமி, 65, தன் குடும்பத்தினருடன், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:போச்சம்பள்ளி அருகே, தாமோதரஹள்ளி பஞ்., சாதிநாயக்கன்பட்டியில், என் மனைவி சரசுக்கு, 0.75 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நாங்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த, 2024ல், அந்த நிலத்தில், 25 அடி சாலை அமைக்க கேட்டு, ஊர்கவுண்டர்கள் சேர்ந்து எங்களை மிரட்டினர். நிலத்தை தர, நாங்கள் மறுத்து விட்டோம். இந்நிலையில், எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி, கட்டப்பஞ்சாயத்து செய்தனர். இது குறித்து பாரூர் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால், நாங்கள் அருகிலுள்ள மாரியம்மன் கோவில், பெருமாள் கோவிலுக்கு செல்லக்கூடாது எனவும், சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கின்றனர்.இது குறித்து கடந்த ஏப்., 10, ஜூன், 9 மற்றும் ஆக., 11 தேதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அவர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, மிரட்டியதில் என் மகன், ஊரை விட்டு சென்று விட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தவித்து வருகிறோம். கட்டப்பஞ்சாயத்து நடத்தி, அராஜகம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.