அறநிலையத்துறையை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ஓசூர் :தமிழக, காங்., தலைவரும், சட்டசபை பொதுக்கணக்கு மதிப்பீட்டு குழு தலைவருமான செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கடந்த, 7ம் தேதி, தன் தொகுதியிலுள்ள வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்ற போது, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை அலட்சியப்படுத்தி, அவமரியாதை செய்துள்ளனர்.அதை கண்டித்து, அகில இந்திய பஞ்., பரிஷத் கூட்டமைப்பு மற்றும் காங்., கட்சி சார்பில், ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஓசூர் தொகுதி முன்னாள் காங்., - எம்.எல்.ஏ.,வும், ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளருமான மனோகரன் பேசுகையில்.'' காங்., தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,வை அவமரியாதை செய்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மனமில்லை. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என்றார். காங்., மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன், மாநில செயலாளர் வீரமுனிராஜ், ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் முனிராஜ், பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.