காங்., மாவட்ட தலைவர் நியமனம் கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட, காங்., தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. காங்., - எம்.பி., கோபிநாத் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய, காங்., கமிட்டி பார்வையாளரும், கர்நாடக மாநிலம் சிவாஜி நகர் எம்.எல்.ஏ.,வுமான ரிஸ்வான் அர்ஷத், தமிழ்நாடு, காங்., கமிட்டி பொதுச்செயலாளர்கள் வசந்தராஜ், சரவணகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.பின்னர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கட்சி வளர்ச்சி, கட்சியை பலப்படுத்துதல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்கிறது. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு புதிய தலைவர்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் கட்சி தொண்டர்களிடம் மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்து கருத்து கேட்கப்படும். மாவட்ட தலைவர் தேர்வு, யாருடைய சிபாரிசும் இன்றி, முழுவதும் கட்சி தொண்டர்களின் கருத்துக்களின் படியே நியமிக்க உள்ளனர். வரும் டிச., 5 வரை கேட்கப்படும் கருத்துகள் குறித்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் கட்சி மேலிடம் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். தமிழகத்தில், 72 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.