கிருஷ்ணகிரியில் இரு நாட்களாக தொடர்மழை; வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில் டோல்கேட், சேலம் மேம்பாலம், திருவண்ணாமலை மேம்பாலம், பழைய பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை, பகுதியில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் தனி குழுக்களாக பிரிந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் தாசில்தார் வளர்மதி தலைமையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஊத்தங்கரை பாம்பாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பாறு அணை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .ஊத்தங்கரை பகுதியில் 24 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் காமராஜ் நகர், எம்.ஜி. ஆர்., நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது இதனால் அப்பகுதி மக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு மீட்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.போச்சம்பள்ளி பகுதியில் கோனானூர் ஏரி நிரம்பி அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சமத்துவபுரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினால் மீட்கப்பட்டு மீட்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில் உள்ள குடியிருப்புகள் வணிக வளாகங்களில் புகுந்து உள்ளது. தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஊத்தங்கரை காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளை முடங்கி உள்ளனர்.