பயிர் மேலாண்மை கண்காட்சி
கிருஷ்ணகிரி: அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும், நான்காம் ஆண்டு வேளாண் மாணவியர், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில், பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் வேளாண் துறை சார்பில், சிறப்பு கண்காட்சியை நடத்தினர். இதில், வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த தகவல்கள் விளக்கப்படங்கள், மாதிரிகள் மற்றும் செயல்விளக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, மண் வகைகள் மற்றும் மண் வள மேலாண்மை, விதைகளின் தரம் மற்றும் விதைத் தேர்வு, விதை நேர்த்தியின் முக்கியத்துவம், பயிர் சாகுபடி முறைகள், உரங்களின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், களை மேலாண்மை, நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை போன்ற தலைப்புகள் இடம்பெற்றன. மேலும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்வு செய்தல், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் வழங்குதல், நீர்ப்பாசனத்தை முறையாக கையாளுதல் மற்றும் பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை உரிய முறையில் கண்டறிந்து மேலாண்மை செய்தல் போன்ற தொழில்நுட்ப தகவல்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.கண்காட்சியில், வேளாண் மாணவியர் திவ்ய தர்ஷினி, அஜிதா, அபிராமி, அகிலா, தனலட்சுமி, அன்புக்கரசி, அஞ்சலி, அனிஷாபானு, அபிநாச்சியார், தேவதர்ஷினி மற்றும் தீபிகா ஆகியோர் பங்கேற்றனர்.