கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை
ஊத்தங்கரை,: ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பஞ்., புளியானுார் கிராமம் அருகே அமைந்துள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் கடப்பாரை ஆறு உள்ளது. ஜவ்வாது மலை மேலிருந்து வரும் தண்ணீர், கடப்பாரை ஆற்றின் வழியாக வந்து, சிங்காரப்பேட்டை பஞ்., உள்ள தீர்த்திரிவலசை பெரிய ஏரியில் நிரம்புகிறது. அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக, வீணாக கடலில் கலக்கிறது. கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரை சேமிப்பதன் மூலம், 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்,இந்த ஆற்றின் மூலம், சென்னம்மாள் கோவில் ஏரி, நார்சாம்பட்டி ஏரி, பிள்ளையார் கோயில் ஏரி, நாய்கனுார் ஏரிகள் நிரம்புவதன் மூலம், தண்ணீரை சேமிக்க முடியும். சிங்காரப்பேட்டை, அத்திபாடி, வெள்ளகுட்டை, நாய்க்கனுார், நடுபட்டி, பாவக்கல், மூன்றம்பட்டி ஆகிய பஞ்.,களில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும். கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால், அப்பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும். அப்பகுதி மக்களின், 50 ஆண்டு கால கோரிக்கையான தடுப்பணை கட்டுவது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம், தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.