உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., - மா.செ., துவக்கி வைக்காததால் பாதி வழியில் திரும்பி வந்த அரசு டவுன் பஸ்: கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தி.மு.க., - மா.செ., துவக்கி வைக்காததால் பாதி வழியில் திரும்பி வந்த அரசு டவுன் பஸ்: கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கிருஷ்ணகிரி: பேரிகை அருகே, தி.மு.க., மாவட்ட செயலாளர் கொடியசைத்து துவக்கி வைக்காததால், புதிதாக விடப்பட்ட அரசு பஸ் திரும்பப் பெறப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்களுடன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ராமன்தொட்டி, பெரியகுத்தி, கமலகொண்ட கொத்துார் பகுதி மக்கள், தங்கள் பகுதிகளிலுள்ள, 150 மாணவர்கள் முதுகுறுக்கி, பேரிகை அரசு பள்ளிகளுக்கு சென்று வர, பஸ் வசதி கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர்.அதன்படி நேற்று, அப்பகுதிகளுக்கு விடப்பட்ட, புதிய அரசு டவுன் பஸ் பேரிகை வரை வந்து, திரும்பிச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த, 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களுடன் நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதி மாணவர்கள் முதுகுறுக்கி, பேரிகை அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால், '314-ஏ' என்ற ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பெரியகுத்தி வரை விடப்பட்ட, 'டி-08' என்ற புதிய அரசு டவுன் பஸ் நேற்று ஓசூரிலிருந்து வந்தது. பேரிகை அருகே போடூர் வரை வந்த பஸ், ராமன்தொட்டிக்கு வரவில்லை. அந்த பஸ்சை வரவேற்க மாணவர்கள், பூமாலை, இனிப்புடன் காத்திருந்த நிலையில், பஸ் மீண்டும் ஓசூருக்கு திரும்பி சென்றது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளை கேட்டபோது, 'கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓரிரு நாட்களில் பஸ்சை கொடியசைத்து துவக்கும் நிகழ்ச்சி உள்ளது. அதன்பின் புதிய பஸ் இயக்கப்படும்' என்கின்றனர். பள்ளி மாணவர்கள் பஸ்சின்றி அவதிப்படும் நிலையில், அரசியல் காரணத்திற்காக பஸ்சை திருப்பி விட்டுள்ளனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர் விசாரிக்க, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.அவர்களிடம், சூளகிரி தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் கேட்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசிய, மாவட்ட கலெக்டர் சரயு, நேற்று மதியம், 3:30 மணிக்கு, சூளகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அந்த அரசு டவுன் பஸ்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ