ஆவண எழுத்தர்கள் ஸ்டிரைக்; பணிகள் தேக்கம்
கிருஷ்ணகிரி:பத்திரப்பதிவுத்துறையை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிக்கும், இ-டெண்டர் மற்றும் 'ஸ்டார் 3.0' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் ஆவண எழுத்தர்கள் இருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவண எழுத்தர்கள், பத்திர விற்பனையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் கூறியதாவது:மாவட்டத்தில், கிருஷ்ணகிரியில்-2, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், பாகலுார், சூளகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், பர்கூர் பகுதிகளிலுள்ள, 13 சார் பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக, 200 பத்திரப்பதிவுகள் நடக்கும்.இதன் மூலம், 2 கோடி முதல், 3 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும். முகூர்த்த நாட்களில், 400 பத்திரப்பதிவு வரை நடந்து, 6 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் தமிழக அரசு பத்திரப்பதிவு மற்றும் நில அளவை பணிகளை தனியார் மயமாக்கும் அரசு சார்பு முயற்சிகளுக்கும், அரசின், இ-டெண்டர் மாதிரி மையம், 'ஸ்டார் 3.0' திட்டத்தை அமல்படுத்தினால் ஆவண எழுத்தர்கள் மற்றும் தட்டச்சு நிலைய உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும் பத்திரப்பதிவில் முறைகேடு அபாயம் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்த போராட்டத்தால், தினசரி நடக்கும் நிலப்பதிவுகள், திருமண பதிவுகள் மற்றும் இதர ஆவண பதிவு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடின. பத்திரப்பதிவுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, நேரம் ஒதுக்கியிருந்த பொதுமக்களும் அலுவலகங்களுக்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.* ஊத்தங்கரையில் சார்பதிவாளர் அலுவலகம் முன் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பத்திர எழுத்தர்கள் சங்க தலைவர் செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் நவாப் ஜான், பொருளாளர் ரவி, சுப்பிரமணி, விஜயலட்சுமி, அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.* தர்மபுரி மாவட்டத்தில் பத்திர எழுத்தாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடின.* பாப்பிரெட்டிப்பட்டி பத்திர எழுத்தர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பத்திரப்பதிவு பணி பாதித்தது.