நோயாளிகளுக்கு சிகிச்சை மருந்து கடைக்காரர் கைது
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சோலை நகரை சேர்ந்தவர் சுகுமார், 41. இவர் காவேரிப்பட்டணம் தாசம்பட்டி ஜங்ஷன் ரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். டி.பார்ம் படித்துள்ள இவர், உரிய மருத்துவ தகுதிகள் இல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். நோயாளிகளுக்கு, ஊசி போட்டு, அலோபதி மருந்துகளை வழங்கி, கிளினிக் போல நடத்தி வந்தார். இது குறித்து மருத்துவத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் நாராயணசாமி மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம், அவரது மருந்து கடையில் சோதனை செய்தனர். அப்போது அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிந்தது-. டாக்டர் நாராயணசாமி கொடுத்த புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடம் சென்று, சுகுமாரை கைது செய்து, மருந்து கடைக்கு 'சீல்' வைத்தனர்.