தேங்காய் வாரச்சந்தை அமைக்க இடம் கேட்டு விவசாயிகள் மனு
கிருஷ்ணகிரி :அரசம்பட்டி, தென்னை விவசாயிகள் சங்க தலைவர் கென்னடி தலைமையில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், தேங்காய் வாரச்சந்தை அமைக்க கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு, அரசம்பட்டி தென்னை புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அரசம்பட்டி தென்னைக்கு, அனைத்து மாநில விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், நேரடியாகவும், இடைத்தரகர்கள் மூலம், அரசம்பட்டி தென்னையை கொள்முதல் செய்கின்றனர். இதில், இடைத்தரகர்கள் கொள்முதல் செய்யப்படும் தென்னைக்கு, விவசாயிகளுக்கு குறைந்த அளவே வருவாய் கிடைக்கிறது.ஆனால், இடைத்தரகர்கள் அதிகளவில் லாபம் ஈட்டுகின்றனர். இந்நிலையில், தென்னை விவசாயிகளின் நலன் கருதி, அரசம்பட்டியில் தேங்காய் வாரச்சந்தை அமைக்க வேண்டும். இதற்காக அரசு இடம் ஒதுக்கி கொடுத்தால், வாரச்சந்தை மூலம் தேங்காய், தென்னை கன்றுகள் உள்ளிட்டவை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வர். அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.