பட்டா வழங்கியும் பதிவில் மாறாத பெயர் 18 ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம்
கிருஷ்ணகிரி: அரசு, பட்டா வழங்கியும் பதிவுகளில் புறம்போக்கு நிலம் என இருப்பதால், 148 விவசாயிகள், 18 ஆண்டுகளாக எந்த பலனையும் பெற முடியாமல் அவதிஅடைந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த குருவிநாயனப்பள்ளி பஞ்., பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனு விபரம்: எங்கள் பஞ்.,சில், நிலம் இல்லா ஏழைகள் 148 பேருக்கு கலைஞர் இலவச நிலப்பட்டா திட்டத்தில் தலா, 2 ஏக்கர் நிலம், 2006ல் வழங்கப்பட்டது. அதற்கான பட்டாவும் வழங்கினர். ஆனால், அரசு பதிவேடுகளில் நிலங்களின் உரிமையாளர்கள் பெயரை மாற்றாமல், புறம்போக்கு நிலமாகவே காட்டி வருகின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்தாலும், ஆழ்துளை கிணறு, பம்பு செட் அமைக்க முடியவில்லை. கணினி சிட்டாவில், எங்கள் பெயர் இல்லாமல் மின் இணைப்பு கொடுக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். பயிர்களை விலங்குகள் சேதப்படுத்தினால் நிவாரணம் பெற முடியவில்லை. வங்கிகளில் கடன் வாங்க முடியவில்லை. பி.எம்., கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்கவில்லை. பட்டா வழங்கியும் அதை முழுதுமாக பயன்படுத்த முடியாமல் வீணாக உள்ளது. கலெக்டர், டி.ஆர்.ஓ., -- ஆர்.டி.ஓ., முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும், 18 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி வரவுள்ள நிலையில் தற்போதாவது எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை அரசு பதிவுகளில் ஏற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.