போச்சம்பள்ளியில் இரு சக்கர மின்சார வாகன தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளியில் உள்ள இரு சக்கர மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, பர்கூர் சிப்காட்டில் தனியார் இரு சக்கர மின்சார வாகனம் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் பழைய, பழுதடைந்த இரு சக்கர மின்சார வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் நேற்று காலை, 6:00 மணிக்கு பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததாக தெரிகிறது. இதிலிருந்து வெளி கிளம்பிய தீப்பொறி மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த, ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேலையாக உயிரிழப்பு, பொருட்சேதம் ஏற்படவில்லை.இதுகுறித்து, தர்மபுரி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.