நாட்டு துப்பாக்கி ஒப்படைக்க கெடு வனச்சரக அலுவலர் அறிவிப்பு
அரூர் மொரப்பூர் வனச்சரக வனக்காவல் எல்லைக்கு உட்பட்ட, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், உரிமம் அற்ற நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து அவற்றை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மொரப்பூர் வனச்சரக வனக்காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கூத்தாடிப்பட்டி, கொத்தனாம்பட்டி, கீழானுார், அரூர், எம்.வேட்ரப்பட்டி, மொரப்பூர், ஒடசல்பட்டி, கதிரிபுரம், வாசிகவுண்டனுார், விழுதுப்பட்டி, பாத்திமா நகர், கடத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் வனத்துறை அலுவலர்களிடமோ அல்லது ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலமாகவோ வரும், 10ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது, வனக்குற்ற வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது.துப்பாக்கிகளை ஒப்படைக்காமல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர வனச்சட்டங்கள் மூலம், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடுமையான தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.