மா.கம்யூ., மாஜி நிர்வாகி நில தகராறில் அடித்து கொலை
தேன்கனிக்கோட்டை: நிலத்தகராறில் தாக்கப்பட்ட மா.கம்யூ., முன்னாள் நிர்வாகி இறந்த நிலையில், தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தடிக்கலைச் சேர்ந்த வெங்கடேஷ், 55; மா.கம்யூ., திப்பசந்திரம் முன்னாள் கிளை செயலர். இரு ஆண்டுகளுக்கு முன், உறவினரான எல்லம்மாவுக்கு சொந்தமான, முத்துராயன்கொட்டாய் கிராமத்தில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை, தன் அக்கா மகன் ராமச்சந்திரனுக்கு வாங்கி கொடுத்தார். எல்லம்மா உறவினர்களான முத்துராயன்கொட்டாய் சின்னபுலிகான், 35, முரளி, 27, ஆகியோர், நிலத்திற்கு உரிமைகோரி வெங்கடேஷிடம் தகராறு செய்து வந்தனர். ஆக., 8ம் தேதி காலை, பைக்கில் சென்ற வெங்கடேஷை, முரளி, சின்னபுலிகான், அவரது மனைவி சுசீலா, சின்னபுலிகானின் தம்பி சிவக்குமார், ஆகியோர் தாக்கினர். படுகாயமடைந்த வெங்கடேஷ், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேன்கனிக்கோட்டை போலீசார், சின்னபுலிகான், முரளியை கைது செய்தனர். சிகிச்சையில் இருந்த வெங்கடேஷ் நேற்று முன்தினம் இறந்தார். இதனால், கொலை வழக்காக மாற்றி, போலீசார், சுசீலா, சிவக்குமாரை தேடி வருகின்றனர்.