பனை பராமரிப்பில் மோசடி: ரூ.41 லட்சம் இழப்பு என குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், '2சி' கணக்கில் உள்ள பனைமரங்களை முறையாக பராமரிக்காமல், 41 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்துார், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவில் உள்ளன. இதையடுத்து, பனை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, 1983ல் மத்துாரில் பனை பொருட்கள் உற்பத்தி மையம் துவங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில பனை வெல்லம் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட, மத்துார் பனைபொருட்கள் மையத்தில், பனை மரத்தின் மதிப்பு கூட்டு பொருட்களான பனைவெல்லம், கருப்பட்டி, பதநீர், சாக்லெட் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயார் செய்யப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.மாவட்டத்தில், 650க்கும் மேற்பட்ட பனை ஏறும் தொழிலாளர்கள் இருந்தனர். மேலும், அரசு கணக்கில் உள்ள மரங்களையும், பனை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விட்டு, மரங்களை அவர்களுக்கு பிரித்து கொடுத்து, பனை பொருட்களை மத்துார் பனை உற்பத்தி மையம் பெற்றது. இந்நிலையில் கடந்த, 2005 முதல் மத்துார் பனை பொருட்கள் உற்பத்தி மையத்தில், பனை மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இது குறித்து, மத்துார் பனை பொருட்கள் உற்பத்தி மைய முன்னாள் ஊழியரும், பனை மதிப்பு கூட்டு பொருட்கள் ஆர்வலருமான மகாதேவன் கூறியதாவது:மத்துார், களர்பதி, கவுண்டனுார், ஒட்டப்பட்டி, ஆனந்துார், அம்மன் கோவில், ஒன்னங்கரை உள்ளிட்ட பஞ்.,களில், 10,284 பனைமரங்கள் உள்ளன. இது இன்றவும் மத்துார் பனைபொருட்கள் உற்பத்தி மையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசு குறிப்பில் உள்ளது. ஆனால், இவற்றை யார் பராமரிப்பு செய்கிறார்கள் என்ற ஆவணம் யாரிடமும் இல்லை.பனை மரங்களை நம்பி வாழ்ந்த, பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். பனை மரத்திற்கான பராமரிப்பு கட்டணம், ஒரு மரத்திற்கு, ஒரு ரூபாய் வீதம் பஞ்சாயத்துகள் தோறும் உள்ள, 400 முதல், 500 மரங்களுக்கு, 500 ரூபாயை வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அரசுக்கு கட்டி கணக்கை முடிக்கின்றனர். ஆனால் பனைபொருட்கள் கூட்டுறவை சேர்ந்த சிலரும், பனை வியாபாரிகள் சிலரும், மரத்திலிருந்து பனை பொருட்களை எடுத்து தனியாருக்கு விற்று வருகின்றனர். கடந்த, சில ஆண்டுகளில் மட்டும் இதனால் அரசுக்கு, 41 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் முதல், பனைபொருட்கள் வாரியம் வரை பலருக்கு மனு அனுப்பினேன். கடந்த, 4 ஆண்டுகளாக எந்த அதிகாரியும் வராத நிலையில், கடந்த பிப்., 28ல் பனைபொருள் வாரிய தலைமை செயல் அலுவலர் மகேஸ்வரி பார்வையிட்டு, 'பனைபொருட்கள் இழப்பீடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அரசு கணக்கில், பராமரிப்பில் உள்ள பனைமரங்களை வைத்து தயாரிக்கும் பனை பொருட்களை தனியாரிடம் விற்று, பல லட்சம் ரூபாய் லாபம் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், அரசு சார்பில் மீண்டும் பனை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பை தொடங்கினால், அரசுக்கும் லாபம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.