ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க பாதுகாப்பு அமைச்சக ஒப்புதல் பெற அரசு முயற்சி
ஓசூர், ஓசூரில், பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, வான்வெளி பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை பெற, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கர்நாடகா - தமிழக எல்லையில், தொழில்துறைகள் நிறைந்த நகரமாக உள்ளது. சமீபகாலமாக அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. பெங்களூரு நகருக்கு இணையாக, ஓசூர் நகரை வளர்ச்சியடைய செய்ய, தேவையான அனைத்தையும் அரசு செய்கிறது. தமிழக வளர்ச்சிக்கு, ஓசூரில் ஒரு விமான நிலையம் தேவை என்பதால், பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, கடந்தாண்டு ஜூன் 27ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், கர்நாடகா மாநில தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும், பெங்ளூருவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் உட்பட பல முன்னணி நிறுவனங்கள், ஓசூருக்கு சென்று விடும் எனவும், கர்நாடகா மாநில அரசு நினைக்கிறது. அதனால், தமிழகத்திற்கு போட்டியாக, அம்மாநிலத்தில் மற்றொரு விமான நிலையம் அமைக்க முயற்சிக்கிறது.என்.ஓ.சி., கொடுத்தால்...கர்நாடகாவின் தேவனஹள்ளியிலுள்ள விமான நிலையத்திலிருந்து, 150 கி.மீ., துாரத்திற்குள், மற்றொரு விமான நிலையம் அமைக்கக்கூடாது என, மத்திய அரசுடன் ஒப்பந்தம் உள்ளது. அதனால், அவர்கள் என்.ஓ.சி., கொடுத்தால் மட்டுமே, ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியும். இதை வைத்து தடுத்து விடலாம் என, கணக்கு போட்டு, கர்நாடகா மாநில அரசு காய் நகர்த்துகிறது.ஆனால், தமிழக அரசு, ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளது. ஓசூர் மற்றும் அதை சுற்றி, 5 இடங்களை விமான நிலையத்திற்கு தேர்வு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கியது. அதில், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் விமான ஓடுதளத்துடன் உள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள், சூளகிரி அருகே, உலகம் என இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உலகம் பகுதி மேடு, பள்ளம் நிறைந்ததாக உள்ளதால், 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், விமான நிலையம் அமைக்க தமிழக அரசு விரும்புவதாக கூறப்படுகிறது.ஆலோசகர் நியமனம்இந்நிலையில், விமான நிலையத்திற்கு மேற்பரப்பு ஆய்வு பணியை மேற்கொள்ள, ஒரு ஆலோசகரையும், தமிழக அரசு நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு தேர்வு செய்துள்ள இரு பகுதிகள், வான்வெளி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதனால், விமான நிலையம் நிறுவ, தனி வான் கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்குமாறு, பாதுகாப்பு அமைச்சகத்திடம் தமிழக அரசு கேட்டுள்ளது. விமான நிலையத்திற்கு தகுதியான இரு இடங்களில் ஒரு இடத்தை, தமிழக அரசு முடிவு செய்த பின், அது வான்வெளி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும், 4 மாதங்களுக்குள் பாதுகாப்பு அமைச்சகம், ஓசூர் விமான நிலையத்திற்கான இடத்திற்கு ஒப்புதல் அளித்து விடும் என, தகவல் வெளியாகியுள்ளது.