கிருஷ்ணகிரியில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை திறப்பு விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையை தம்பிதுரை எம்.பி., திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி,- ராயக்கோட்டை சாலையில் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி அருகில், அதியமான் அறக்கட்டளை சார்பில், கட்டப்பட்டுள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது. அதியமான் அறக்கட்டளை நிறுவனர் தம்பிதுரை எம்.பி., மற்றும் அதியமான் அறக்கட்டளை அறங்காவலர், ஓசூர் செயிட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை ஆகியோர் தலைமை வகித்து, மருத்துவமனையை திறந்து வைத்தனர்.இது குறித்து தம்பிதுரை எம்.பி., கூறுகையில், ''கிருஷ்ணகிரியில், தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய மையமாக செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை இருக்கும். இந்த மருத்துவமனையில், வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கப்படும். அவர்களின் பெற்றோர்களுக்கு மருத்துவ கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்படும்,'' என்றார். வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன், அதியமான் அறக்கட்டளை அறங்காவலர் சுரேஷ்பாபு, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜாமுத்தையா, சி.ஓ.ஓ., அன்பன்சேவியர், மருத்துவ அலுவலர் டாக்டர் பார்வதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், முனிவெங்கட்டப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.