உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அழிவின் விளிம்பிலுள்ள மரங்களை காக்க நர்சரி குறுங்காடுகள் வளர்ப்பு திட்ட விழாவில் தகவல்

அழிவின் விளிம்பிலுள்ள மரங்களை காக்க நர்சரி குறுங்காடுகள் வளர்ப்பு திட்ட விழாவில் தகவல்

கிருஷ்ணகிரி:''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள மரம், செடிகளை பாதுகாக்க நர்சரி அமைக்கப்படும்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சென்னசந்திரம் பஞ்.,க்கு உட்பட்ட பந்தரகுட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தில், 45 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களில், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி லதா, சப் கலெக்டர் பிரியங்கா மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தனர். டைட்டான் நிறுவன மேலாண்மை இயக்குனர் வெங்கட் ரமணன், உதவி வன பாதுகாவலர் அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ், சமூக பொறுப்பு நிதி செயல் அலுவலர் ஸ்ரீதர், மண்டல மேலாளர் ஸ்ரீகாந்த் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலைதுறையினர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:பொதுமக்களின் பங்களிப்புடன் அரசு புறம்போக்கு நிலங்களை குறுங்காடுகளாக மாற்றும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 33 ஏக்கரில் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடுத்து, 12 ஏக்கரில், 2ம் கட்டமாக மரக்கன்றுகள் நடப்படும். அரிய வகை மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள் செடிகளான நீர் மருது, கருமருது, ஈட்டி, சிவலிங்க மரம், பச்சலிங்க மரம் போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய மறக்கப்பட்ட மரங்களையும் நடவு செய்து, இங்கு ஒரு சிறிய காடு ஏற்படுத்த டைட்டான் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த மரங்கன்றுகளை, 2028 -வரை, 3 ஆண்டுகளுக்கு வளர்த்து பராமரிப்பதற்கு டைட்டன் நிறுவனம் முன்வந்துள்ளது. மரக்கன்றுகளை வளர்க்க நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.இவை வளர்ந்து காடாக மாறினால், மாசு கட்டுப்படுத்தப்பட்டு இயற்கை வளம் மேம்பட்டு மனித குலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அழியும் விழிம்பில் உள்ள மரங்களை பாதுகாக்க தனி நர்சரி அமைக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ