உடல்நலக்குறைவால் இன்ஸ்பெக்டர் மரணம்
மாரண்டஹள்ளி உடல்நலக்குறைவால், மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.மயிலாடுதுறை மாவ ட்டம் குத்தாலம் அருகே உள்ள பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 55. இவர், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேல், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி பாமா, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்-. மனைவி குழந்தைகள், மதுரையில் உள்ளதால், வெங்கட்ராமன், தர்மபுரியில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம், 13ம் தேதி மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் பணி முடித்து, தான் தங்கியுள்ள மகேந்திரமங்கலம் காவலர் குடியிருப்புக்கு சென்றார். குளிக்க குளியலறைக்கு சென்றவர், நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சந்தேகத்தின் பேரில் போலீசார் சென்று பார்த்தனர். பின், உள்பக்கமாக தாழிடப்பட்ட குளியலறையின் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு, தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அப்போது மூளையின் நரம்பு பகுதியில் ரத்த வெடிப்பு ஏற்பட்டது தெரிந்தது. அதற்காக அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பிய நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அவர் உயிரிழந்தார்.