தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
கிருஷ்ணகிரி: தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ -- ஜியோ கூட்டமைப்பினர், உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி, பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை அருகே நடந்த போராட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பூபதி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர். கடந்த, 2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அனைவருக்கும், பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில், 30 சதவீதத்திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். தி.மு.க., அரசு தேர்தலுக்கு முன் கூறிய, அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி துணை பொதுச்செயலாளர் மாம்கி ஞானசேகரன், தமிழ்நாடு வருவாய்த்துறை ஆசிரியர் கூட்டணி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.