கே.ஆர்.பி., அணை நீர்திறப்பு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும், நீர்வரத்து உள்ளது. கடந்த ஆண்டு அக்., 9ல் அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. அன்றிலிருந்து அணைக்கு தொடர்ந்து சீரான நீர்வரத்து இருந்ததால், கடந்த மார்ச் 8 வரை, 150 நாட்களாக அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 9ல் அணைக்கு நீர்வரத்து குறைந்தும், 10ல் இந்த ஆண்டில் முதல் முறையாக நீர்வரத்து பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணை நீர்மட்டமும் சரிந்து வந்தது. பின்னர் பெய்த மழையால், 4 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து மீண்டும் துவங்கியது. சீரான நீர்வரத்து இருந்தாலும், மழையின்றி இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த ஏப்., 30ல் மீண்டும் அணைக்கு நீர்வரத்து பூஜ்ஜியம் ஆனது. அடுத்த நாளே அணைக்கு நீர்வரத்து துவங்கினாலும், மழையின்றி அணை நீர்மட்டம், 50 அடியை எட்டவில்லை. கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் லேசானது முதல் கனமழை பெய்தது. இதனால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த, 8ல், அணைக்கு நீர்வரத்து, 464 கன அடியாக அதிகரித்த நிலையில் நேற்று, 309 கன அடியாக குறைந்தது. கடந்த மார்ச் 9 முதல் மே 7 வரை, 60 நாட்களுக்கு பிறகு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம், 50 அடியை எட்டியது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 358 கன அடியும், பாசன கால்வாயில், 12 கன அடியும் என மொத்தம், 370 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.