மேலும் செய்திகள்
மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது
28-Oct-2025
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் அருகே, மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தவர் தலையில் கல்லை போட்டு கொன்ற, அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் பஞ்., சாப்பரத்தான் கொட்டாயில், காவேரிப்பட்டணம் - வேலம்பட்டி சாலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை உள்ளது. அப்பகுதியிலுள்ள, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒருவர், நேற்று மதியமும் அப் பகுதியிலேயே சுற்றியதால், அவரை பிடித்து விசாரித்தனர். அவர், சூளகிரி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த சித்தப்பா, 48, என்பதும், பழைய பேப்பர் பொறுக்கும் தொழிலாளி எனவும் தெரிந்தது. தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மணி என்பவரை, கொலை செய்ததாக கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது: சூளகிரி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த சித்தப்பாவும், அதே பகுதியை சேர்ந்த மணி, 40, என்பவரும் நண்பர்கள். இருவரும் பழைய பேப்பர், பாட்டில் பொறுக்கும் தொழில் செய்து வந்தனர். ஒன்றாக மது அருந்துவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். சித்தப்பாவின் மனைவி அனிதாவுடன், மணிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த, 3 மாதங்களுக்கு முன் சித்தப்பாவின் மனைவியை அழைத்துக்கொண்டு மணி சென்று விட்டார். இருவரையும் பல இடங்களில் சித்தப்பா தேடினார். நேற்று முன்தினம் காரிமங்கலம் அருகே பாட்டில் பொறுக்கிக் கொண்டிருந்த மணியை, சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, மது வாங்கி கொடுத்தார். அப்போது தன் மனைவியை விட்டு பிரிந்து செல்ல கேட்டார். மறுப்பு தெரிவித்தார் மணி. போதையில் இருந்த சித்தப்பா, ஆத்திரமடைந்து கீழே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து, மணியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு தப்பினார். பின், என்ன நடக்கிறது என்பதை பார்க்க, அங்கேயே சுற்றியதால் போலீசில் சிக்கினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
28-Oct-2025