அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காத அதிகாரிக்கு எம்.எல்.ஏ., டோஸ்
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் நடந்த, சமுதாய கூட மறுசீரமைப்பு பணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத டவுன் பஞ்., செயல் அலுவலர் மற்றும் பணிகளை சரிவர செய்யாத தலைவரை, தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் கடிந்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, 5வது வார்டு அம்பேத்கர் நகரிலுள்ள சமுதாய கூடத்தை, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பணிகளை கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்களிடம் அரசின் திட்டங்கள் முறையாக வந்து சேர்கிறதா என கேட்டார். அவர்கள், 'தென்பெண்ணையாற்று நீர் மட்டுமே எங்கள் பகுதிக்கு வருகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரவில்லை. சாக்கடை கால்வாய்கள் துார்வாரப்படவில்லை. பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.அப்போது நிகழ்ச்சியில், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ராணி கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை கேட்டு, எம்.எல்.ஏ., மதியழகன், 'டென்ஷன்' ஆனார். அவரை மொபைலில் அழைத்த அவர், 'இங்கே ஒரு அரசு நிகழ்ச்சி நடக்கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., கலந்து கொண்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் வரவில்லை, உடனடியாக வாங்க...' என, கோபமாக கூறினார்.டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம், 'மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்யாமல் என்ன செய்து கொண்டுள்ளீர்கள். உடனடியாக சாக்கடை கால்வாய்கள், கழிப்பறைகளை சுத்தப்படுத்துங்கள்' என்றார்.அதற்குள் அங்கு வந்த காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ராணியிடம், 'மக்கள் குறைகளை கூறும்போது, அதிகாரிகள் கூறும் விளக்கத்தை தான், நாங்கள் கூற முடியும். நீங்களே வரவில்லை என்றால், மக்களுக்கு யார் பதில் கூறுவது. இன்னும், 2 நாட்களில் இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்' என கூறிச்சென்றார்.