அறிவிப்பு பலகையில் குளறுபடி குழப்பத்தில் வாகன ஓட்டிகள்
போச்சம்பள்ளி, நவ. 12-போச்சம்பள்ளியிலிருந்து செல்லம்பட்டி, அகரம் வழியாக காரிமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இதில் பாரூர் செல்லும் பிரிவு சாலையில் 10 மீ., இடைவெளியில் முக்கிய ஊர்களுக்கு செல்ல, இத்தனை கி.மீ., என நெடுஞ்சாலைத்துறை மூலம், 10 மீட்டர் இடைவெளியில், 2 பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போச்சம்பள்ளியிலிருந்து செல்லும் போது, முதலில் உள்ள பெயர் பலகையில் காரிமங்கலம் செல்ல, 8 கி.மீ., எனவும், அடுத்துள்ள பலகையில், காரிமங்கலம் செல்ல, 12 கி.மீ., எனவும் உள்ளது.ஊத்தங்கரை, மத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், காரிமங்கலம் செல்ல இந்த பிரதான சாலையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். 10 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள இந்த பெயர் பலகையை பார்க்கும் வாகன ஓட்டிகள், குழப்பமடைந்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த பெயர் பலகை குழப்பத்தை சரிசெய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.