உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை சாலை விரிவாக்க பணி மந்தகதியில் நடப்பதாலும், அவ்வப்போது பெய்யும் மழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல் சேலம் வரை, தேசிய நெடுஞ்சாலையில், 4 வழி சாலை அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக வாணியம்பாடி முதல், அரூர் ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. மத்திய அரசு, 169.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி வரை, 15.60 கி.மீ.,வரை உள்ள இரு வழி சாலையை, 4 வழி சாலையாகவும், மஞ்சவாடி முதல் கோம்பூர் வரை உள்ள, 2.20 கி.மீ., சாலையை, 10 மீட்டர் சாலையாகவும் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்., தொடங்கி, 18 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணி நடந்து வருகிறது.ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரையிலான சாலையில் உள்ள, 53 சிறு பாலங்களை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோரம், சாலையில் குழிகள் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டும், சில இடங்களில் கம்பிகள் கட்டப்பட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஏ.பள்ளிப்பட்டி முதல் சாமியாபுரம் கூட்ரோடு வரை, 90 சதவீதம் பணி முடிந்து போக்குவரத்து நடக்கிறது. சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து மஞ்சவாடி வரை, பாலம் அமைக்கும் பணி பெயரளவுக்கு நடப்பதால், சாலை ஒரு வழிப்பாதையாக உள்ளது. இதனால் அவ்வழியே சென்று வரும், கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.தர்மபுரி--தொப்பூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், டோல்கேட் கட்டணத்துக்கு அஞ்சி, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்கிறது. நேற்று முன்தினம் இரவு, மழை பெய்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வரும் லாரி, மேடான பகுதியில் ஏற முடியாமல் சாலையில் நிற்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.பணியை விரைந்து முடித்து, தடையில்லாத போக்குவரத்துக்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை