பல கோடி ரூபாய் அளவில் கனிம வள கொள்ளை: கி.கிரி மாவட்டத்தில் 4 ஸ்டேஷன்களில் 8 வழக்கு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக நடந்த கனிமவள கொள்ளை தொடர்பாக ஒரே நாளில், 4 ஸ்டேஷன்களில் மொத்தம், 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, நாகமங்கலம் அருகே நீலகிரி அனுமந்தராய சுவாமி கோவில் நிலத்திலிருந்த, 28.51 கோடி ரூபாய் மதிப்பு கிரானைட் கற்கள் மற்றும் கிருஷ்ணகிரி அருகே பாலேகுளி பட்டாளம்மன் கோவில் நிலத்தில் இருந்த, 170.14 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டன.இது தொடர்பாக, ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமளவில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள் மூலம், அரசு மற்றும் பட்டா நிலங்களில் கனிமவள கொள்ளை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இதில், ராயக்கோட்டை அருகே கணக்கம்பட்டியிலுள்ள பட்டா நிலம், சூளகிரி காலிங்கவரம் அரசு புறம்போக்கு நிலம், ஓசஹள்ளியில் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலம், பீர்ப்பள்ளி, ரத்தினகிரி, அகலக்கோட்டை, பைரமங்கலத்திலுள்ள பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் அளவிற்கு, கனிமவள கொள்ளை நடந்துள்ளது தெரிந்தது.இது தொடர்பாக, அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள் புகார் படி, ராயக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலம், தளி ஆகிய, 4 போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று முன்தினம் மட்டும், ஒரே நாளில் மொத்தம், 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ராயக்கோட்டை அருகே ஏரிசின்னகானப்பட்டியை சேர்ந்த சித்தன், போடப்பள்ளி ராமசாமி, ஏனுசோனை அருகே பருவீதியை சேர்ந்த சுப்பிரமணி, பீர்ப்பள்ளி பூங்கொடி, சின்னார் ராமசாமி, தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் காவேரியம்மா, ஜவளகிரி பிரகாஷ்ரெட்டி, பைரமங்கலம் பிரகாஷ், அகலக்கோட்டை ராமச்சந்திரா என, 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றத்தின் கடும் உத்தரவால், மாவட்ட நிர்வாகம் வேறுவழியின்றி சட்டவிரோத கனிமவள கொள்ளை குறித்த ஆய்வில் தீவிரம் காட்டி வருகிறது.