ஓசூரில் புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவை
ஓசூர், ஓசூரில், முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில், 4 தாழ்தள சொகுசு பஸ்கர் அரசால் வழங்கப்பட்டுள்ளன.இதில், 3 பஸ்கள், ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி வரையிலும், ஒரு பஸ்சை, தேன்கனிக்கோட்டைக்கும் இயக்க டிப்போ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்பஸ்களின் சேவைகள் துவக்க விழா, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், பஸ்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.