சத்துணவு ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தில், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் தகுதி உள்ள ஆண் வாரிசுகளுக்கும் பணி வழங்க வேண்டும். 12 மாத ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 10, 20, 30 ஆண்டு பணி முடித்த ஊழியர்களுக்கு பணி முடித்த நாள் முதல் பணி மூப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு கால பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். பணிக்கொடை தலா, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் ராதா, லட்சுமி, மாவட்ட இணை செயலாளர்கள் சாந்தி, சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் ஜெகதாம்பிகா, மாநில துணை தலைவர் மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.