உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு எந்த பயனும் இல்லை என ஆயில்பட்டி மக்கள் சலிப்பு

மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு எந்த பயனும் இல்லை என ஆயில்பட்டி மக்கள் சலிப்பு

ராசிபுரம், மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எந்த பயனும் இல்லை என, ஆயில்பட்டி பொதுமக்கள் சலிப்புடன் தெரிவிக்கின்றனர்.ராசிபுரம் சப்-டிவிசனில் வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு சேர்த்து, ஒரு இன்ஸ்பெக்டர் தான் கவனித்து வந்தார். இவருடைய அலுவலகம் பேளுக்குறிச்சியில் உள்ளது. ஆனால், மற்ற இரண்டு ஸ்டேஷன்களும், சேலம் மாவட்ட எல்லையில் உள்ளன.மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷன், பேளுக்குறிச்சியில் இருந்து, 28 கி.மீ., துாரத்தில் உள்ளது. இடையில் ஆயில்பட்டி ஸ்டேஷனையும் தாண்டி தான் மங்களபுரம் செல்ல வேண்டும். மங்களபுரம் ஸடேஷன் எல்லை அங்கிருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்கு உள்ளது. இது, சேலம் மாவட்ட எல்லையான மல்லியக்கரை வரை பரவியுள்ளது. இதனால், திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர்கள், 30 கி.மீ., துாரத்தில் உள்ள பேளுக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது.இதனால், 'ஆயில்பட்டி, மங்களபுரத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் தனியாக நியமிக்க வேண்டும்' என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, சில மாதங்களுக்கு முன் மங்களபுரம் ஸ்டேஷன் உள்பட மாவட்டத்தில் உள்ள, ஆறு போலீஸ் ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி, இன்ஸ்பெக்டரை நியமனம் செய்தது. மங்களபுரம் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டு, இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். தரம் உயர்த்தப்பட்ட பின் ஸ்டேஷன் எல்லைகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும், புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பழையபடி, 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தான் ஆயில்பட்டிக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக செயல்படுவார். 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களபுரம் இன்ஸ்பெக்டர், அந்த ஸ்டேஷனை மட்டுமே கவனிப்பார். மேலும், ஆயில்பட்டி ஸ்டேஷனுக்கு, முள்ளுக்குறிச்சி வரை எல்லைகள் உள்ளன.இதனால், முள்ளுக்குறிச்சியில் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால், 35 கி.மீ., துாரத்திற்கு இன்ஸ்பெக்டர் வர வேண்டும். மங்களபுரத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டால், ஆயில்பட்டி பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், மங்களபுரம் ஸ்டேஷன் தரம் உயர்த்தி இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டும், எந்த பயனும் இல்லை என, அப்பகுதி மக்கள் சலிப்புடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !