வட்டார கலை திருவிழா போட்டி ; வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், பள்ளி கல்வித்துறை சார்பில், கலைத்திருவிழா போட்டிகள் நடந்து வருகிறது. அதன்படி, வேப்பனஹள்ளி வட்டார கல்வி மையத்திற்கு உட்பட்ட, 120 அரசு தொடக்கப்பள்ளி மாணவியர், கே.திப்பனப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளியில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொண்டனர். இதில், நெடுமருதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 4 மற்றும், 5ம் வகுப்பு படிக்கும் குந்தவை குழுவை சேர்ந்த மாணவியர், வட்டார அளவிலான பரத நாட்டிய போட்டியில் முதலிடமும், 2ம் வகுப்பு படிக்கும் மாணவி ரக்ஷனா, தமிழ் பாடல் ஒப்புவித்தல் போட்டியில், 2ம் இடத்திலும் வெற்றி பெற்றனர்.இருவரும், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, பகுதி நேர ஆசிரியர் அம்சவள்ளி ஆகியோர் வாழ்த்தினர். மேலும், வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, மரியரோஸ், மேற்பார்வையாளர் கஸ்துாரி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மகேஷ், சிவக்குமார், குமரன், நடன பயிற்சியாளர்கள் அகிலா, வினோத்குமார் உள்பட பலர், மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.