சீரமைத்தும் சேதமான அங்கன்வாடி கட்டடம்
தேன்கனிக்கோட்டை: தளி ஒன்றியம், குந்துக்கோட்டை பஞ்.,க்கு உட் பட்ட சொப்புக்குட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மைய கட்டடம் மிகவும் மோசமாக இருந்ததால், தளி ஒன்றிய பொது நிதியிலிருந்து, 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 2024 - 25ம் ஆண்டு, கட்டடம் பழுது நீக்கி புதுபிக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில், அங்கன்வாடிக்கு சென்று, மக்கள் பார்த்த நிலையில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, சொப்புக்குட்டை பகுதி மக்கள் கூறியதாவது: அங்கன்வாடி மையத்திற்கு, 40,000 ரூபாய் மதிப்பில் பெயின்ட் மட்டுமே அடித்துள்ளனர். ஆனால், மற்ற வேலைகள் ஏதும் செய்யப்படவில்லை. சமையலறை மற்றும் கழிவறை தண்ணீர் வெளியே செல்ல அமைக்கப்பட்டுள்ள குழாய் உடைந்துள்ளது. படிக்கட்டுகள் மற்றும் திண்ணை உடைந்துள்ளது. அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. அதனால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளன. கட்டடத்தை சரியாக புதுப்பிக்காத காரணத்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி, மீண்டும் அவர் மூலமாகவே, சீரமைப்பு பணியை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.