பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்ப பரிமாற்ற பிரசார கூட்டம்
கிருஷ்ணகிரி, மத்திய பட்டு வாரியம் சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்ப பரிமாற்ற, பிரசார கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, பி.திப்பம்பட்டி கிராமத்திலுள்ள விவசாயி மணிமாலாவின் பட்டு தோட்டத்தில், இந்திய அரசின் மத்திய பட்டு வாரியம் சார்பில், 'என் பட்டு என் பெருமை' பிரசார திட்டத்தில், பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நுட்ப பரிமாற்ற பிரசார கூட்டம் நேற்று நடந்தது. மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி முத்தண்ணா தலைமை வகித்து, மல்பெரி நடவு, தோட்ட பராமரிப்பு முறை, உரமிடுதல், நோய் கட்டுப்படுத்தும் முறைகள், பட்டுப்புழு வளர்ப்பு முறை, தரமான பட்டுக்கூடு உற்பத்தி, சந்தைப்படுத்துதல் ஆகிய தொழில்நுட்பங்களை விரிவாக விளக்கி கூறினார்.கிருஷ்ணகிரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய பட்டு வாரியம் மூலம் பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார். இதில், 62 பட்டு விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். இதில், உதவி ஆய்வாளர்கள் சுதா, ராஜேஷ்கண்ணா, இளநிலை ஆய்வாளர்கள் ஜெயராஜ், வாசு, பர்வீன், ஸ்ரீதர் உள்பட பலர் உடனிருந்தனர்.