நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 3,906 பேருக்கு சிகிச்சை: கலெக்டர்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.முகாம் குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், 3 முகாம்கள் என, 10 வட்டாரத்தில், 30 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடக்க உள்ளது. இதுவரை, ஓசூர் மாநகராட்சி, பாகலுார், தளி ஆகியபகுதிகளில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, கெலமங்கலம் மற்றும் சுற்றுவட்டார மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அரங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான அரங்கு மற்றும் நலவாரிய உறுப்பினர்களுக்கான அரங்கு ஆகியவை அமைக்கப்பட்டது. முகாமில், 3,906 பேர் சிகிச்சை பெற்றனர். தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சத்யபாமா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.