உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீக்குளித்த மாற்றுத்திறனாளி மரணம் உடலை பெற மறுத்து போராட்டம்

தீக்குளித்த மாற்றுத்திறனாளி மரணம் உடலை பெற மறுத்து போராட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட எலுமிச்சங்கிரியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 53; மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ஜமுனா, 48, மகன் சவுந்தர், 30, மகள் சவுந்தர்யா, 25. எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் வெங்கடேசனுக்கும், நிர்வாகத்தினருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.வெங்கடேசன், அவரது குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாக ஊர் பெரியவர்கள் கூறினர். மனமுடைந்த வெங்கடேசன் கடந்த, 15ல், எலுமிச்சங்கிரி அரசு துவக்கப்பள்ளி முன் உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவர் இறந்தார். இவரது தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், நியாயம் கிடைக்கவும் கோரி, தங்கள் வாயில் கறுப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏற்றியும், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, மகராஜகடை இன்ஸ்பெக்டர் தேவி பேச்சு நடத்தினர்.வெங்கடேசன் உறவினர்கள் கூறியதாவது:எங்கள் ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, ஊரை விட்டு ஒதுக்கியதாக, ஊர் கவுண்டர்கள் ராமன், கிருஷ்ணமூர்த்தி, ஊர் பிரமுகர்கள் கிருஷ்ணன், தேவேந்திரன், மற்றும் சின்ன கோவிந்தன் உட்பட எட்டு பேர் மீது வெங்கடேசன், கலெக்டர் முதல் வி.ஏ.ஓ., வரை புகார் அளித்தார்; யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆறு பேர் மீதுள்ள கோபத்திலும், மன உளைச்சலிலும் தற்கொலைக்கு முயன்றதாக தீக்காயங்களுடன் வெங்கடேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.தீக்குளித்து இறந்தவரின் சடலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது எங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. எலுமிச்சங்கிரி கிராமத்தில் உறவினர்கள், 65 குடும்பத்தினர் உள்ளோம். நாங்கள் மறியலிலோ, ஆர்ப்பாட்டத்திலோ ஈடுபடவில்லை. மரண வாக்குமூலத்தின்படி அவரது தற்கொலைக்கு காரணமாகி வழக்கு பதியப்பட்டுள்ள, 14 பேரில், ஐந்து பேரையாவது போலீசார் கைது செய்தால் தான் சடலத்தை வாங்குவோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ