மாணவியரை அடித்த பள்ளி தலைமையாசிரியர் பெற்றோர் போராட்டத்தால் இடமாற்றம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சென்னப்பள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 180 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியராக ரகுநாத், 52, பணியாற்றி வந்தார். நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்ததால், மதியம், 3:30 மணியளவில், 8 ம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர், வகுப்பறையில் பாட்டு பாடி ஆட்டம் போட்டனர். சத்தம் கேட்டு வந்த தலைமையாசிரியர் ரகுநாத், மாணவியரை தகாத வார்த்தையால் திட்டி குச்சியால் அடித்துள்ளார். அந்த நேரத்தில் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்திருந்த பெற்றோர், மாணவியரின் சத்தம் கேட்டு பள்ளிக்குள் சென்றனர். அங்கு தலைமையாசிரியர் மாணவியரை அடிப்பதை பார்த்து கடும் ஆத்திரமடைந்தனர். ஏன் மாணவியரை அடிக்கிறீர்கள் என தலைமையாசிரியரிடம் பெற்றோர் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்க துவங்கினர்.இதை பார்த்த உதவி தலைமையாசிரியர் ஜெயம்மா மற்றும் மற்ற ஆசிரியர்கள், தலைமையாசிரியரை மீட்டு பாதுகாப்பாக ஒரு அறையில் போட்டு பூட்டினர். பள்ளி வளாகத்தில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமையாசிரியர் ரகுநாத்தை, கெலமங்கலம் ஒன்றியம், போலகொல்லை அரசு நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து, கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டார். மேலும், உரிய விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் மீது தவறு இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை கேட்டு பெற்றோர் கலைந்து சென்றனர். பூட்டிய அறையை திறந்து தலைமையாசிரியரை கல்வித்துறை அதிகாரிகள் விடுவித்தனர்.