ஓசூரில் சுங்க கட்டணம் வசூல்: மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு டெண்டருக்கான பணத்தை கட்டாமல் சுங்க கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில், தனி நபருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கிய கமிஷனர், மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், நடைபாதை வியாபாரி கள் தினமும் சுங்க கட்டணம் செலுத்தி சிரமப்படுவதை அறிந்த மாநகராட்சி நிர்வாகம், சுங்க கட்டணம் வசூல் செய்யும் உரிமம் வழங்குவதை கடந்த, 2 ஆண்டுக்கு முன் நிறுத்தியது. ஆனால் கடந்த, 2 ஆண்டுகளாக நடைபாதை வியாபாரிகளை மிரட்டி தனிநபர்கள் சுங்க கட்டணம் வசூல் செய்தனர்.விண்ணப்பம் நிராகரிப்பு அதனால் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளனர். மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்களுக்கு தலா, 15 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமையை கடந்த, 2022 - 23 ம் ஆண்டில் தனிநபர், 3 ஆண்டுக்கு டெண்டர் எடுத்தார். அந்த ஆண்டுக்கு, 25 லட்சம் ரூபாயை மாநகராட்சிக்கு செலுத்திய தனி நபர், கடந்தாண்டு செலுத்த வேண்டிய தொகையில் பாதி அளவு மட்டுமே கட்டினார். மீதமுள்ள பணத்தை இன்றளவும் கட்டவில்லை. ஆனால், பஸ்களுக்கு சுங்க கட்டணத்தை தொடர்ந்து வசூல் செய்தார். இந்த ஆண்டுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்தாமல், கடந்த, 7 மாதமாக முறைகேடாக சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளார். இதை மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் கண்டறிந்துள்ளார்.இதுமட்டுமின்றி, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான கழிவறை, குடிநீர், லக்கேஜ் அறை, பஸ் கால அட்டணை, இருக்கைகள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், இந்த ஆண்டு வட்டார போக்குவரத்துத்துறை பஸ் ஸ்டாண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது. அதாவது தகுதியில்லாத பஸ் ஸ்டாண்ட் என விண்ணப்பத்தை நிராகரித்தது. மேலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் வாடகையை செலுத்தாமல், 60 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்து கடையை மூடி சென்றுள்ளனர். இப்படி, மாநகராட்சிக்கு பல்வேறு வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் சிலர் உதவியாகவும், உடந்தையாகவும் இருந்துள்ளனர். கமிஷனர் வரை உரிய தகவல்கள் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை இல்லைஇது தொடர்பாக காலைக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியான நிலையில், நேற்று முன்தினம் கமிஷனர் ஸ்ரீகாந்த் மாநகராட்சி ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். மேலும், வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் சென்று, பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தார். ஆனால், தவறு செய்த மாநகராட்சி அலுவலர்கள் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது, தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடவடிக்கை எடுக்காததன் பின்புலத்தில், மாநகராட்சிக்கு மக்கள் பிரதிநிதியாக தேர்வாகி, முக்கிய பொறுப்பில் உள்ளவர் அழுத்தம் கொடுப்பது தான் காரணம் என, தகவல் வெளியாகியுள்ளது.ரூ.11.20 லட்சம் ஒதுக்கீடுஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் சென்று, பஸ் ஸ்டாண்டில் நேரில் ஆய்வு செய்துள்ளோம். 11.20 லட்சம் ரூபாய் மதிப்பில், பஸ் ஸ்டாண்டில், 75 இருக்கைகள், விளக்குகள், கழிவறைகள் புதுப்பிப்பு, 45 சிசிடிவி கேமராக்கள், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, குடிநீர் வசதி அமைத்து, குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளோம். பஸ் ஸ்டாண்டில் சுங்க கட்டணம் வசூல் செய்த ஒப்பந்ததாருக்கு, 4 வது முறையாக நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மாநகராட்சி அலுவலர்களுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஒப்பந்ததாரரிடம் அபராத தொகையுடன், அவர் செலுத்த வேண்டிய தொகையும் வசூல் செய்யப்படும். பஸ் ஸ்டாண்டில் உள்ள, 6, 7 ம் நம்பர் கடை உட்பட மேலும் பல கடைகள் மறு ஏலத்திற்கு வர உள்ளன. பாக்கி தொகை முழுவதும் வசூல் செய்யப்படும்,'' என்றார்.